உங்கள் அன்பை மாநிலத்துக்கு வளர்ச்சி வடிவத்தில் திருப்பி செலுத்துவதே இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் நோக்கம்.. மோடி

 
மோடி

உங்கள் அன்பை மாநிலத்துக்கு வளர்ச்சி வடிவத்தில் திருப்பி செலுத்துவதே இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் நோக்கம் என்று கர்நாடக மக்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.


கர்நாடக மாநிலம் மாண்டியாவில் 118 கி.மீ. தொலைவிலான பெங்களூரு-மைசூரு விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மாண்டியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் நோக்கம் உங்கள் அன்பை மாநிலத்துக்கு வளர்ச்சி வடிவத்தில் திருப்பி செலுத்துவதாகும். கடந்த சில நாட்களாக மக்கள் விரைவு சாலையை பற்றி பேசுகிறார்கள். மேலும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த திட்டத்தால் நாட்டின் இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் பிரதமருக்கு சவக்குழி தோண்டுவதில் மும்முரமாக உள்ளது. ஆனால் மோடி ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். 

காங்கிரஸ்

மக்களின் நம்பிக்கையே எனது கேடயம். கர்நாடகாவுக்கு அதிகாரம் அளிப்பதில் நான் மும்முரமாக இருக்கிறேன். 2014க்கு முன் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஏழை மக்களை அழிக்க எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. ஏழை மக்களுக்கான பணத்தை காங்கிரஸ் அரசு கொள்ளையடித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. கர்நாடகாவில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ், கர்நாடகாவில் 40 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு-மைசூரு விரைவு சாலை

இந்த திட்டங்கள் அனைத்தும் அனைவரும் ஓர் நிறை, அனைவருக்கும் வளர்ச்சி என்பதற்கு வழி வகுத்தது. இந்த அனைத்து இணைப்பு திட்டங்களுக்கும் நான் உங்களை வாழ்த்துகிறேன்.  உள்கட்டமைப்பு வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் புதிய வணிக வழிகளை உள்கட்டமைப்பு மாநிலத்திற்கு  கொண்டு வருகிறது.  பெங்களூரு மற்றும் மைசூரு ஆகியவை கர்நாடகாவின் முக்கியமான நகரங்கள். இரண்டும் அதன் சொந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்று அதன் தொழில்நுட்பத்திற்காக அறியப்படுகிறது, மற்றொன்று அதன் பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது. இந்த இரண்டு நகரங்களின் உள்கட்டமைப்பையும் இணைப்பது முக்கியமானது. இந்த நகரங்களுக்கு இடையே வெறும் மூன்று மணி நேரத்தில் பயணிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.