சனாதனத்தை ஒழிப்பதே INDIA கூட்டணியின் நோக்கம் - பிரதமர் மோடி பேச்சு
இந்திய கலாசாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல்திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அயோத்தி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவித்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் என உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.
சனாதன தர்மத்தை ஒழிப்பதே INDIA கூட்டணியின் நோக்கம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றி பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: எதிர்கட்சிகளின் கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்கள் சனாதனம் மீதான தாக்குதல் இந்திய கலாசாரம் மீதான தாக்குதல். யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்துகொண்டே இருக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனவாதிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் விவேகானந்தர், லோகமான்ய திலக்கிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை INDIA கூட்டணி அழிக்க நினைக்கிறது. இந்திய கலாசாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல்திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன. இவ்வாறு கூறினார்.