ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

 
PM Modi

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.  

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின்  49வது உச்சி மாநாடு  ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்க உள்ளது. உலகிலேயே முதன்முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான இடம் என்பதால் அணு ஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிபாட்டை வலியுறுத்துவதற்கு சிறந்த இடமாக இது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.  அந்த வகையில் இன்று தொடங்க இருக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஓலா ஸ்கால்ஸ்,  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தனி விமானங்கள் மூலம் வருகை தந்துள்ளனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் மட்டுமே கொண்ட இந்த மாநாட்டில் இந்தியா,  ஆஸ்திரேலியா, பிரேசில்,  இந்தோனேஷியா, தென்கொரியா, மியான்மர், குக் தீவுகள் ஆகிய நாடுகள் சிறைப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி  இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்து இருந்தது. 

இந்நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.  ஜி7 உச்சி மாநாட்டை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதமர் மோடி, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை  திறந்து வைக்கிறார். ஜப்பானைத் தொடர்ந்து, பப்புவா நியூகினியாவுக்கு மே 22-ந் தேதி செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.  பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீசிடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.