பி.எம் கேர்ஸ் அரசு அமைப்பு அல்ல… அதிர்ச்சி தந்த ஆர்டிஐ

 

பி.எம் கேர்ஸ் அரசு அமைப்பு அல்ல… அதிர்ச்சி தந்த ஆர்டிஐ

கொரோனாவை எதிர்கொள்ள தொடங்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதி அமைப்பு அரசு அமைப்பு இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சடத்தில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நிதி அளிக்கும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்காக பி.எம் கேர்ஸ் என்ற புதிய நிதி உதவி வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கிவைத்தார். ஏற்கனவே பிரதமர் பொது நிவாரண நிதி இருக்கும்போது எதற்காக பி.எம் கேர்ஸ் என்று புதிதாக ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஆனாலும் பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு பி.எம் கேர்ஸ் நிதிக்கு அதிக நன்கொடை அளித்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பி.எம். கேர்ஸ்-க்கு அளிக்க பிரதமர் அலுவலகம் வற்புறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியது.
இந்த நிலையில் கர்நாடாகாவைச் சேர்ந்த ஹர்ஷா கந்தூகுரி என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பி.எம் கேர்ஸ் நிதி தொடர்பான தகவலை அளிக்கும்படி பிரதமர் அலுவலகத்தில் மனு செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 1ம் தேதி மனு தாக்கல் செய்து காத்திருந்தார். ஆனால் எந்த ஒரு விளக்கமும் கிடைக்கவில்லை. இதனால், மே முதல் வாரத்தில் மேல் முறையீடு செய்தார் ஹர்ஷா.

பி.எம் கேர்ஸ் அரசு அமைப்பு அல்ல… அதிர்ச்சி தந்த ஆர்டிஐமே 29ம் தேதி ஹர்ஷாவுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் ஒன்று வந்துள்ளது. அதில், “ஆர்டிஐ சட்டம் 2(எச்) படி பி.எம் கேர்ஸ் அரசு அமைப்பின் கீழ் வரவில்லை. எனவே, இது தொடர்பான விவரங்களை பெற பி.எம் கேர்ஸ் இணையதளத்துக்கு சென்று பார்த்துக்கொள்ளவும்” என்று கூறப்பட்டிருந்தது. இதனால் ஹர்ஷா அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பி.எம் கேர்ஸ் பற்றி அறிய ஆர்வமாக இருந்தேன். நிதியத்தின் பெயர், அமைப்பின் கட்டமைப்பு, கட்டுப்பாடு, சின்னத்தின் பயன்பாடு, அரசு பண்புரிமைப் பெயர் போன்று அனைத்தும் இது அரசு அதிகாரத்தின் கீழ்தான் வருகிறது என்பதையே காட்டுகிறது. எனவே, மீண்டும் மேல்முறையீடு செய்வேன்” என்றார்.

பி.எம் கேர்ஸ் அரசு அமைப்பு அல்ல… அதிர்ச்சி தந்த ஆர்டிஐபி.எம் கேர்ஸ் நிதிக்கு இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை நிர்வகிப்பவர்கள் யார், இந்த நிதி எதற்காக செலவிடப்படுகிறது என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் உள்ளது. இது அரசு அமைப்பா அல்லது பா.ஜ.க-வின் நிதி அமைப்பா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையின்றி செயல்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.