வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு- பினராயி விஜயன்

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவு சம்பவம் நம் நாடு இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு. நேற்று மிகக் கடுமையான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கும், 4.10 மணிக்கும் என 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 93 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் இதன் எண்ணிக்கை மாறலாம். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு 128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு தூங்கச் சென்ற பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்துக் கேட்டறிந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணியை மேற்கொண்டிருக்கிறோம்” என்றார்.