லட்டு சர்ச்சை- விரதத்தை நிறைவு செய்து திருமலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பவன் கல்யாண்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு செல்வதற்கு முன்பு தனது மகள்கள் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏழுமலையான் மீது நம்பிக்கை இருப்பதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் 11 நாட்கள் பிராயச்சித்த தீட்சை மேற்கொண்டார். இந்த தீட்சையை நிறைவு செய்யும் விதமாக நேற்று திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். இன்று காலை ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்றார். முன்னதாக துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகள் கொனிடேலா பாலினா அஞ்சனி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேவஸ்தான அதிகாரிகள் கொண்டு வந்த உறுதிமொழி நம்பிக்கை பத்திரத்தில் கையொழுத்திட்டார். அதில் ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக கையெழுத்திட்டார். பாலினா அஞ்சனி மைனர் என்பதால், அப்பாவாக பவன் கல்யாணும் அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் போது உறுதிமொழி நம்பிக்கை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ஜெகன்மோகன் தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்து கொண்டார். இந்நிலையில் பவன் கல்யாண் தனது மகளுக்காக அவரும் அவருடைய மகளும் நம்பிக்கை உறுதி கையெழுத்திட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சாமி தரிசனம் செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் அன்னப்பிரசாதம் தயார் செய்வது பக்தர்களுக்கு பரிமாறுவதை கேட்டறிந்து அவரும் அதிகாரிகளுடன் அன்னதானம் உணவு அருந்தினார். தொடர்ந்து திருமலையில் தங்கும் அவர் நாளை மாலை திருப்பதியில் நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.