"இந்தியா இனி வலிமை குன்றிய நாடல்ல" - ராஜ்நாத் சிங்
இந்தியா இனி ஒருபோதும் வலிமை குன்றிய நாடாக இருக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 1,500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மின்சார வாகன ஆலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியா இனி ஒருபோதும் வலிமை குன்றிய நாடாக இருக்காது. ஆத்மநிர்பர் திட்டத்தின்கீழ், இந்தியா தனக்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க தொடங்கிவிட்டது பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி நாடு முன்னேறி வருகிறது.
லக்னோ, கான்பூர், ஜான்சி, ஆக்ரா, அலிகார் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் பரந்து விரிந்துள்ள பாதுகாப்பு வழித்தடத்தில், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்கள் தொடர்பான உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. உத்தரபிரதேசம் பாதுகாப்பு உற்பத்தியின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாரிய முதலீட்டை ஈர்ப்பதும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், மாநிலத்திற்கு வெளியே இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படாமல் உள்ளூரில் வேலை தேடுவதை உறுதி செய்வதும் உத்தரப் பிரதேச விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பிரிவு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கொள்கையின் நோக்கமாகும்” என்றார்.


