காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க ஆணை

காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுதில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனிடையே இன்று மதியம் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது, காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது, மழைப்பொழிவுக்கான வாய்ப்பும் குறைவாக உள்ளதால், தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் நிலவுவதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பது இயலாத காரியம், கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளிலும் போதுமான தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையே காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றது குறிப்பிடதக்கது.