நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு - எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு அணியப்பட்டது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை வெற்றிகரமாக திருப்பி அனுப்பி இருப்பதாக அமெரிக்க எல்லை காவல் படைத் தலைவர் மைக்கேல் டபிள்யூ.பேங்க்ஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தொலைதூர நாடான இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் மக்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் அமெரிக்காவின் உறுதியை தங்கள் நடவடிக்கை பறைசாற்றுவதாகவும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் யாராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அந்த பதிவில், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு அணியப்பட்டது தெரிவந்தது. இதனிடையே இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. “அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் போது இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட மனிதாபிமானமற்ற முறை குறித்து அவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கினார்.