தெலங்கானாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை - மொத்த பாதிப்பு 5ஆக உயர்வு

 
monkeypox

தெலங்கானா மாநிலத்திலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. 

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு காங்கோ நாட்டில் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோயை போல குரங்குகளிடம் பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் என அழைக்கின்றன. வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பியா, அமெரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களில் பரவி வருவதன் காரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 9000க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

monkeypox

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதன் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் இருவருக்கு குரங்கமை நோய் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே நேற்று டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 40 வயது நபருக்கு குரம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.