ஜம்மு - காஷ்மீர் முதல்வராக உமர் அப்துலா பதவியேற்பு.. இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்பு..
ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி, சிபிஎம் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 49 இடங்களைக் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைக்க அறுதி பெரும்பான்மை கிடைத்தது. முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
ஸ்ரீ நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். உமர் அப்துல்லாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் துணை முதலமைச்சராக சுரிந்தர் குமார் சவுத்ரி பதவி ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை தொடர்ந்து நான்கு பேர் ஜம்மு காஷ்மீர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டார்கள்.
பதவியேற்பு விழாவில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


