எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.. மக்களவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தனித்து போட்டி.. நவீன் பட்நாயக் அறிவிப்பு

 
வெள்ளத்தில் மூழ்கிய ஒடிஷா… நீட் தேர்வை ஒத்திவைக்க பிரதமரிடம் போனில் பேசிய நவீன் பட்நாயக்

2024 மக்களவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக  பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்பட  பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து நிதிஷ் குமார் பேசிவருகிறார். அந்த வகையில், நிதிஷ் குமார் கடந்த சில தினங்களுக்கு முன் புவனேஸ்வரில் ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். 

நிதிஷ் குமார்

நிதிஷ் குமாருடன் சந்திப்பு குறித்து நவீன் பட்நாயக் கூறுகையில், எந்த கூட்டணி குறித்தும் விவாதம் நடத்தப்படவில்லை என்று  தெரிவித்தார். இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில்  பிஜூ ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என்று நவீன் பட்நாயக் தெரிவித்தார். நவீன் பட்நாயக்கின் இந்த அறிவிப்பு, பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட வைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல்களில் எனது கட்சி தனித்து போட்டியிடும், அதுதான் எப்போதும் திட்டம். பூரி விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். எந்த வகையிலும் உதவுவதாக பிரதமர் என்னிடம் தெரிவித்தார். டெல்லி பயணத்தில் வேறு எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.