மேகாலயாவில் மீண்டும் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி - பாஜக முழு ஆதரவு

 
bjp and npp

நடந்து முடிந்த மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடைக்காத நிலையில் தேசிய மக்கள் கட்சி, பாஜக மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இரவு வரை நடைபெற்றது. திரிபுரா , நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மேகாலயாவில் ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். முதலமைச்சர் கான்ராட் சங்மா, தெற்கு துரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பெர்னார்டு மராக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவிடம் என்பிபி கட்சி ஆதரவு கோரியது. ஆதரவு தருவதாக என்பிபி கட்சியின் தலைவருக்கு மேகாலயா பாஜக தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கான்ராட் சங்மா  தலைமையில் மீண்டும் என்.பி.பி., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைகிறது.