பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பு

 
நிதிஷ்

பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ் குமார்..

Image


பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த கூட்டணியில் ஏற்பட்ட உரசல் காரணமாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கைக்கோர்க்க விரும்பினார். இதற்காக அவர் பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சில நிபந்தனைகளுடன் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இன்று காலை பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் தற்போது மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ் குமார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சியுடன் இணைந்ததை அடுத்து, 9வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நிதீஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Image

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பீகாரில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அதன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் சாத்தியமான எல்லா உதவிகளும் செய்யப்படும்.  முதலமைச்சராகப் பதவியேற்ற திரு நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ள திரு சாம்ராட் சவுத்ரி  மற்றும் திரு விஜய் சின்ஹா  ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த குழு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் மாநிலத்தின் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.