“தமிழ்நாட்டில் 3ஆம் வகுப்பு பயிலும் 8.6 சதவீத மாணவர்களுக்கு படிக்க கூட தெரியவில்லை"- நிர்மலா சீதாராமன்

சட்டசபையில் ஜெயலலிதா புடவையை இழுத்தது யாரு? நீங்க நாகரிகம் குறித்து பேசலாமா? என பட்டியலிட்டு தி.மு.க.,வை தாக்கிய நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தர்மேந்திரன் பிரதான் கூறிய அநாகரீகமான போராட்டம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறிய பெரியார் புகைப்படத்தை தி.மு.க.வினர் வணங்கி, தங்கள் அடையாளமாக போற்றுகிறீர்கள். தமிழால் பிச்சைகூட கிடைக்காது என்றார் பெரியார்... தமிழ்நாட்டில் 3ஆம் வகுப்பு பயிலும் 8.6 சதவீத மாணவர்களுக்கு எழுத்துகளை படிக்கத் தெரியவில்லை. மாணவர்களுக்கு ஏன் படிக்கத் தெரியவில்லை என்பதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் பதில் அளிக்க வேண்டும். நீங்கள் எந்த லட்சனத்தில் அரசுப்பள்ளி கூடங்களை நடத்தி வருகிறீர்கள்..?
மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் தமிழ் நாட்டிற்கு 29 பைசா மட்டுமே திரும்ப வருவதாக தமிழக அரசு கூறுகிறது. சென்னை, கோவை அதிக வருமானம் கொடுக்கிறது என்பதற்காக பெரம்பலூர், கோவில்பட்டிக்கு தமிழக அரசு பணம் கொடுப்பதில்லையா? பெண்ணுரிமை குறித்து பேசும் தி.மு.க.வினர் தான் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்தனர். இதுதான் தி.மு.க.,வின் பண்பாடா? தமிழ்நாட்டு மக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறவில்லை” என்றார்.