மகாராஷ்டிராவில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தாலும் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழாது.. அஜித் பவார்

 
36 மணி நேரத்துக்கு பிறகு டிவிட்டரில் மவுனத்தை கலைத்த அஜித் பவார்….சித்தப்பாதான் எங்க தலைவர்! .

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முகாமின் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தாலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் கவிழாது என்று தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்தார். 

மகாராஷ்டிராவில் நேற்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாவின்  (யு.பி.டி.) கொறடா சுனில் பிரபு தலைமையிலான குழு, மகாராஷ்டிராவின் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிாவால் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஜிதேந்திர போலை ஆகியோரை சந்தித்தனர். அப்போது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவின் 16 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தீர்ப்பளிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு, ஏக்நாத் ஷிண்டே முகாமின் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை விரைவாக எடுக்கும்படி கோரி துணை சபாநாயகர் நர்ஹரி ஜிாவாலிடம்  79 பக்க கடிதம் ஒன்றை அளித்தனர்.

உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாவின்  (யு.பி.டி.)  இந்த நடவடிக்கையால் உண்மையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு கவிழாது என்று தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்தார். இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது: 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், ஏக்நாத் ஷிண்டே-தேவந்திர பட்னாவிஸ் (சிவ சேனா-பா.ஜ.க.) ஆட்சி கவிழாது.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

ஆளும் கூட்டணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்  செய்யப்பட்டாலும் அரசு பெரும்பான்மையை இழக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில்  ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா மற்றும் பா.ஜ.க.வின் ஆளும் கூட்டணிக்கு மொத்தம் 145 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் ஒட்டு மொத்த கூட்டணிக்கு 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை காட்டிலும் ஆளும் கூட்டணிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.