ஜி20 மாநாடு மண்டபத்தில் நடராஜர் சிலை - பிரதமர் மோடி பெருமிதம்

பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் வருகின்ற 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலையை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையில் உள்ள ஸ்ரீ தேவசேனாதிபதி சிற்ப கூடத்திற்கு இதற்கான பணி வழங்கப்பட்ட நிலையில், ஸ்தபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்ரீகண்டன், சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த சிலையை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனர். 28 அடி உயரம் ,21 அடி அகலம், 18 டன் எடையில் பித்தளை ,செம்பு ,இரும்பு ,ஈயம் ,தங்கம் ,வெள்ளி ,வெள்ளியம், பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களை கொண்ட அஷ்ட தாதுக்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 8 டன் எடையில் பீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது கடந்த 28ஆம் தேதி டெல்லி சென்றடைந்தது.
பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும். https://t.co/uFEcx22jgi
— Narendra Modi (@narendramodi) September 6, 2023
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில், பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது;
ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும் என்று பதிவிட்டுள்ளார்.