விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை தவறினால்... அமேசான் நிர்வாகிகள் கைது.. மத்திய பிரதேச அமைச்சர் எச்சரிக்கை

 
அமேசான்

மத்திய பிரசேதத்தில் போதை பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்கு அமேசான் நிர்வாகிகள் ஒத்துழைக்கவில்லையென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அம்மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை செய்துள்ளாா.

மத்திய பிரதேசத்தில், விசாகப்பட்டிணத்திலிருந்து அமேசான் வாயிலாக கஞ்சாவை பெற்றுக் கொண்டு ரொக்கமாக பணம் செலுத்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்ததாக கடந்த வாரம் பிண்டி போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமேசான் நிர்வாகிகளுக்கு  மத்திய பிரதேச போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அமேசான் நிர்வாகிகள் காவல்துறைக்கு சரியாக ஒத்துழைப்பு அழைக்கவில்லை. இந்நிலையில் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அமேசான் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நரோட்டம் மிஸ்ரா

மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இது தொடர்பாக கூறியதாவது: கஞ்சா கடத்தலுக்கு அமேசான் பயன்படுத்தப்பட்டது என்பது மிகவும் தீவிரமான  விஷயம். நாங்கள் அந்நிறுவன அதிகாரிகளை அழைத்தோம். ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் அவர்களை கைது செய்வோம். அத்தகைய நடவடிக்கையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். 

அமேசான்

அமேசானில் விற்பனையாளராக பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனம் 12 இடங்களில் கஞ்சா சப்ளை செய்துள்ளது. அமேசான் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். விசாகப்பட்டிணத்திலிருந்து கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா பேக் செய்யப்பட்டு ஸ்டீவியா இலை என கடத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பாக எந்த விதிகளும் வழிகாட்டுதல்களும்  இல்லை. இ-காமர்ஸ் இணையதளங்கள் வாயிலாக ஆயுதங்கள் கூட சப்ளை செய்யப்படலாம். ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்  தளத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக மத்திய பிரதேச அரசு விதிமுறைகளை வகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.