மசாலா தோசைக்குள் இருந்த எலி
மும்பையில் ஹோட்டல் ஒன்றில் மைசூர் மசாலா தோசை வாங்கி சாப்பிட்டபோது, அதில் சிறிய எலி ஒன்று இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.

மும்பையின் போரிவலி மேற்கில் உள்ள ராதாகிருஷ்ணா ஹோட்டலில் பரிமாறப்பட்ட மைசூர் மசாலா தோசைக்குள் இறந்த எலி ஒன்று இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் கூறியதை அடுத்து, உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார் ஒன்று எழுந்துள்ளது. போரிவலி மேற்கு ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள அந்த உணவகத்தில், செப்டம்பர் 29 ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நடவடிக்கை எடுத்து, அந்த உணவகத்தின் உணவு வணிக உரிமத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.புகாரின் படி, உணவு அருந்தியவர் தோசையில் செத்த எலி கிடந்ததை பார்த்ததும் வாந்தி எடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் மீது FDA தீவிர நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 23 வரை, FDA 3,068 உணவு நிறுவனங்களை ஆய்வு செய்து, 248 உரிமங்களை இடைநீக்கம் செய்துள்ளது.

