தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் பரிதாப பலி! மும்பையில் அதிர்ச்சி
மும்பை பைதோனி பகுதியில் தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமாக மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காவல்துறையின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு நடந்துள்ளது. அன்று இரவு சுமார் 10:30 மணியளவில், நெருங்கிய உறவினர்கள் உட்பட மொத்தம் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இரவு உணவு அருந்தினர். அவர்கள் சிக்கன் புலாவ் சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த உறவினர்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர். நள்ளிரவு 1 மணியளவில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தர்பூசணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 26 அன்று அதிகாலை சுமார் 6 மணி அளவில், 4 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒரு குடும்ப மருத்துவர் சிகிச்சை அளித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜேஜே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் அடுத்தடுத்து பலியானது அனைவரையும் அதிர வைத்துள்ளது. புலாவ் சாப்பிட்ட உறவினர்கள் நலமாக இருப்பதால், தர்பூசணியே 'ஃபுட் பாய்சன்' ஆகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

