நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் : 23ம் தேதி பட்ஜெட் தாக்கல்..

 
Parliament


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  

 நாடாளுமன்ற  மக்களவையில் ஆண்டு தோறும்  பிப்ரவரி மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.  ஆனால் இந்த ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்  புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் அப்போதே அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 7  கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது. 

புதிய நாடாளுமன்றம் கட்டடம்

அதனை தொடர்ந்து கடந்த மாதம் புதிய மக்களவையின்  முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது புதிய எம்.பிக்கள் பதவி ஏற்றனர். இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அவரது உரையின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அதன் பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி அதாவது நாளை தொடங்கும் எனவும்,  ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடந்த 6-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

பட்ஜெட்

 அதன்படி நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கப்பட உள்ளது. நாளை மறுநாள் ( ஜூலை 23)  செவ்வாய்க்கிழமை அன்று நடப்பு நிதியாண்டிற்கான (2024 -2025) முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.  பிரதமர் மோடி  மூன்றாவது முறையாக அமைத்துள்ள ஆட்சிக்காலத்தில்  தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும். 19 அமர்வுகளாக நடைபெறும் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாளை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.