தண்ணீர் குழாயிலிருந்து கொட்டிய பணம்.. வாலியில் பிடித்த அதிகாரிகள்..

 
karnataka

கர்நாடகத்தில் ஊல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், அரசு அதிகாரி ஒருவரது வீட்டின் தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக 13 லட்சத்து 50 ஆயிரம் பணம் பதுக்கி வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 60 இடங்களில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வகையில் கலபுரகி மாவட்டம் ஜேவர்கியில், பொதுப்பணித்துறையில் ஜூனியர் என்ஜினியராக பணியாற்றிவரும் சாந்த கவுடாவின் வீட்டிலிருந்து ஏராளமான நகைகள், பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

money

முதலில் ஊழல் தடுப்புப் பிரிவினர் அவரது வீட்டிற்கு சோதனை செய்ய சென்றபோது அவர் அனுமதிக்கவில்லையாம். 15 நிமிடங்கள் கழித்து தான் அவர் அதிகாரிகளை வீட்டிற்குள்ளே  அனுமதித்திருக்கிறார்.  அந்த 15 நிமிட இடைவேளையில் பணத்தை மறைத்து வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சாந்த கவுடா,மழை நீர் வடிவதற்காக பொருத்தப்பட்டிருந்த குழாயில் திணித்து வைத்திருக்கிறார். குழாய் மட்டும் இணைப்புகள் இன்றி தனியே இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அதனை அறுத்துப் பார்த்தபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் கொட்டியிக்கிறது.  

money

அந்த குழாயில் இருந்து மட்டுமே 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்திருக்கிறது.  இவற்றை தண்ணீரை பிடிப்பது போல் அதிகாரிகள் வாலியில் பிடித்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல், சாந்த கவுடா 15 லட்சத்தை தனது மகனின் அறையிலும், ரூ.6 லட்சத்தை மேல் சிலாப்பிலும் தூக்கி வீசியிருக்கிறார். லாக்கரில் இருந்த நகைகள் உள்பட ஒட்டுமொத்தமாக சாந்த கவுடாவின் வீட்டிலிருந்து மட்டும் ரூ. 56 லட்சம் மதிப்பிலானவை கைப்பற்றப்பட்டுள்ளன.