டெல்லியில் இன்று இரவு 10 மணி- நாளை இரவு 10 மணி வரை இணையதள வசதி ரத்து
இன்று (09.10.2026) இரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை 24 மணி நேரத்திற்கு, டெல்லியில் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இணையதள வசதி ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா கட்டுப்பாட்டிலுள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கரப்பான் பூ ஜனதா கட்சியின் போராட்டத்தை முன்னிட்டு, மத்திய டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் 24 மணி நேர மொபைல் இணையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜன்பத்-கர்த்தவ்யா பாதை சந்திப்பிலிருந்து நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மொபைல் இணைய சேவைகள் முடக்கப்படும் என, டெல்லி காவல்துறை துணை ஆணையர் அறிவித்துள்ளார்.
சிறப்புத் தீவிர மறுஆய்வில் (SIR) நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, குமார் பதவி விலகக் கோரி, மத்திய டெல்லி மற்றும் நகரின் பிற பகுதிகளில் சி.ஜே.பி. ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக டெல்லி காவல்துறையும் மத்திய அரசும் இணைந்து தேசிய தலைநகர் முழுவதும் 37 அம்சங்களைக் கொண்ட பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை அமல்படுத்தியுள்ளன. பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த சுமார் 23,000 வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் என துணை ராணுவப் படைகள் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமை அன்று காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை புது தில்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

