'Miss Pretty India' பட்டம் வென்ற பிரபல இன்புளுயன்ஸர் தற்கொலை
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மொத்தம் 16 லட்சம் ஃபாலோவர்ஸ்களை கொண்டிருந்த சமூக ஊடக பிரபலம் நிதி திவாரி, தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 30.
பேஸ்புக்கில் சுமார் 9 லட்சம் ஃபாலோவர்ஸ்களையும், இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 7 லட்சம் ஃபாலோவர்ஸ்களையும் கொண்டிருந்தவர் நிதி திவாரி. இவரது பதிவுகள், ஆயிரக்கணக்கானவர்களின் கவனங்களை ஈர்ப்பது வழக்கம். அதே நேரத்தில் அவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்தன. 2024-ல், நிதி 'Miss Pretty India' பட்டத்தை வென்றார். அதன் பிறகு அவர் மாடலிங் மற்றும் நடிப்புத் துறையில் பிசியாக வலம் வந்தார். சனிக்கிழமையன்று மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நிதியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
நிதி மாடலிங், நடிப்பு மற்றும் திரைப்படத் துறையில் ஆர்வமாக இருந்ததாகவும், சனிக்கிழமை மாலை தொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்ததாகவும், அதன்பின்னரே தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். இருப்பினும், அவரது மரணத்துக்கு முந்தைய தொலைபேசி அழைப்புகள் ஆராயப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை முடியும் வரை தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த முடிவுகளுக்கும் வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

