எங்க கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கோங்க.. கான்ராட் சங்மாவுக்கு மேகாலயா பா.ஜ.க. கோரிக்கை

 
எர்னஸ்ட் மாவ்ரி

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எங்களது 2 எம்.எல்.ஏ.க்களின் உங்க அமைச்சரவையில் சேர்த்துக்கோங்க என்று நாளை இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள கான்ராட் சங்மாவிடம் அம்மாநில பா.ஜ.க. தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி அதிகபட்சமாக 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 2 இடங்களில் வெற்றி பெற்றது. மேகாலயாவில் ஆட்சியமைக்க பாஜகவிடம் என்.பி.பி. கட்சி ஆதரவு கோரியது. இதனையடுத்து என்.பி.பி. கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது மேலும் ஆதரவு கடிதத்தையும் அளித்தது. சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் என்.பி.பி. கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேகாலய கவர்னர் பாகு சௌஹானை சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

கான்ராட் சங்மா

மேகாலயாவின் முதல்வராக கான்ராட் சங்மா மார்ச் 7ம் தேதி (நாளை) இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். ஷில்லாங்கில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளார் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கான்ராட் சங்மாவுக்கு மேகாலயா பா.ஜ.க. தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக மேகாலயா பா.ஜ.க. தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி கூறியதாவது: எங்கள் இரு எம்.எல்.ஏ.க்களையும் (அலெக்சாண்டர் லாலு ஹெக்) மற்றும் சன்போர் ஷுல்லாய்) அமைச்சரவையில் சேர்க்குமாறு கான்ராட் சங்மாவிடம் கேட்டுக் கொள்கிறோம்.

மோடி

ஏனென்றால் எங்களது இரு எம்.எல்.ஏ.க்களும் அனுபவமிக்க எம்.எல்.ஏ.க்கள். எங்கள் கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பிரதமர் மோடி மார்ச் 7ம் தேதி காலை 11 மணியளவில் ஷில்லாங் வருவார். முதல் முறையாக மேகாலயாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். பின்னர் பிரதமர் நாகாலாந்து செல்கிறார். கான்ராட் சங்மா தலைமையில் அமையும் அடுத்த அரசாங்கம் போதுமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களுடன் நிலையான அரசாங்கமாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.