மெகா சூரிய நமஸ்கார யோகா நிகழ்ச்சி ... 1 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பு.. அசத்தும் ஆயுஷ் அமைச்சகம்..

 
சூரிய நமஸ்காரம்

மகர சங்கரந்தியை முன்னிட்டு நாளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சூரிய நமஸ்கார நிகழ்ச்சியில் 1 கோடி பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் போன்று அறுவடைத்திருநாள் நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நாளை  (ஜனவரி 14) பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை ஒட்டி உலகளாவிய சூரிய நமஸ்கார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகம்

முதலில்  75 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று  தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாறாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று  ஆன்லைன் வாயிலாக செய்தியாளர்களைச்  சந்தித்த ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால்,  கொரோனா பரவும் இந்த சூழலில்  மகர சங்கராந்தி அன்று சூர்ய நமஸ்காரம் செய்வது நல்லது என்று தெரிவித்தார்.

சூரிய நமஸ்காரம்

மேலும், இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் 75 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என இலக்கு நிர்ணயித்திருந்ததாகவும், ஆனால்  பதிவு செய்தவர்களை பார்க்கும்போது ஒரு கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக  தெரிவித்தார்.  இந்த நிகழ்ச்சியில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்பர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய நமஸ்காரம்