60 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியில் சீனா பாலம் கட்டுகிறது.. மத்திய அரசு தகவல்

 
சீனா

பாங்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வருவது குறித்து, 60 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியில் சீனா பாலம் கட்டுகிறது என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

லடாக்கில் உள்ள பாங்காங் எல்லை தொடர்பாக இந்தியா-சீனா இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள  பாங்காங் ஏரியின் குறுக்கே ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா பாலம் கட்டுவது செயற்கைகோள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இந்த தொடர்பாக மத்திய அரசு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில் தற்போது சீனா பாலம் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

சீனா பாலம் கட்டி வருவதை வெளிப்படுத்தும்  செயற்கைகோள் படம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாங்காங் ஏரியில் சீனாவால் பாலம் அமைக்கப்படும் என்ற செய்திகள் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சுமார் 60 ஆண்டுகளாக சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. நமது பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோட்டின்  மேற்கு பகுதியில் உள்ள பகுதிகளில் பிரச்சினைக்குரிய விஷயங்களை தீர்க்க, இது போன்ற கோமாளித்தனங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக , இந்திய அரசுடன் இணைந்து சீனா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்று மத்திய அரசு நம்புகிறது.

மத்திய அரசு

இந்திய எம்.பி.க்களுக்கு சீன அரசு கடிதம் எழுதியது குறித்து கூறுகையில், இந்திய எம்.பி.க்களின் இயல்பான செயல்பாடுகளை விளம்பரபடுத்துவதை, நமது இருதரப்பு உறவுகளில் நிலைமையை மேலும் சிக்கலாக்குவதை சீனா தவிர்க்க வேண்டும். கடிதத்தின் பொருள், தொனி மற்றும் காலம் பொருத்தமற்றது. இந்தியா ஒரு துடிப்பான  ஜனநாயகம் என்பதையும், இந்திய எம்.பி.க்கள் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் நம்பிக்கைகளின்படி நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் சீன தரப்பு கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.