கேரளாவில் அதிகாலை பயங்கர நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு.. தூங்கிக்கொண்டிருந்த 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்த அவலம்..

கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த நிலச்சரிவுகளில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே வயநாடு சூரல்மலை பகுதியில் கேரளா மின்சார வாரியம் கட்டிய அணையும் நிரம்பி, அதிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சூரல்மலை பகுதியில் இடைவிடாது கொட்டிவரும் கனமழை காரணமாக நேற்று காலை முதலே சில இடங்களில் லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் ஒரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அட்டமலையில் இருந்து முண்டகை செல்வதற்கு இருந்த ஒரே ஒரு பாலலும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வயநாடு சூரல்மலையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், இதனை அறியாது வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர் அப்படியே மண்ணில் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 400க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதுகப்பிற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிந்த மீட்பு குழுவினர்கள் அனைவரும் சூரல் மலை வரவழைக்கப்பட்டு மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாகியுள்ளது. முதல்கட்ட மீட்பு பணியில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Horrible visuals of landslide coming in from Meppadi, Wayanad.#Wayanad #Landslide #Kerala pic.twitter.com/4DHZYV7Ciu
— West Coast Weatherman (@RainTracker) July 30, 2024