சிக்கிம் ராணுவ முகாமில் பயங்கர நிலச்சரிவு.. 3 வீரர்கள் உயிரிழப்பு..!
சிக்கிம் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 29ம் தேதி முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்த மாநிலங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிக்கிமில் ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் திடீரென மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக சிக்கிமில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக சாட்டென் மற்றும் லாச்சங் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’, கியால்ஷிங், நாம்ச்சி, சோரெங், கேங்டாக் மற்றும் பாக்யோங் ஆகிய பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.


