என்னை சிறையில் அடைத்து தொந்தரவு செய்யலாம், ஆனால் என் மனதை உடைக்க முடியாது.. மணிஷ் சிசோடியா

 
மணிஷ் சிசோடியா

என்னை சிறையில் அடைத்து தொந்தரவு செய்யலாம். ஆனால் என் மனதை உடைக்க முடியாது என்று  தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அண்மையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. மணிஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சிறையில் மணிஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். பின்பு அவரை கைது செய்தனர். 

சி.பி.ஐ.

பின்பு  மணிஷ் சிசோடியாவை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.  மணிஷ் சிசோடியாவை இம்மாதம் 17ம்  தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், மணிஷ் சிசோடியா, என்னை சிறையில் அடைத்து தொந்தரவு செய்யலாம் ஆனால் என் மனதை உடைக்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அமலாக்கத்துறை

இது தொடர்பாக மணிஷ் சிசோடியா தனது டிவிட்டரில், ஐயா, நீங்கள் என்னை சிறையில் அடைத்து தொந்தரவு செய்யலாம். ஆனால் என் மனதை உடைக்க முடியாது. ஆங்கிலேயர்களும் சுதந்திர போராட்ட வீர்களுக்கு தொல்லை கொடுத்தனர். ஆனால் அவர்களின் மனது உடைந்து போகவில்லை என பதிவு செய்துள்ளார்.