நடந்தது நடந்ததுதான், இப்போது மாநிலத்தில் இயல்புநிலை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்.. மணிப்பூர் முதல்வர்

 
வெளியே, உள்ளே ஆட்டம் ஆடிய துணை முதல்வருக்கு 3 துறைகளை கொடுத்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்

நடந்தது நடந்ததுதான், இப்போது மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம் என்று அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்தார்.

மணிப்பூரில் தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் சூழ்நிலையில், அம்மாநிலத்தில் அண்மையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக  அம்மாநில முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பைரன் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்தது நடந்ததுதான், இப்போது மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம். சமூகங்களுக்கிடையில் எந்த சண்டையும் இல்லை, எதுவும் இருக்கக் கூடாது. அது (சண்டை) அரசாங்கத்துடன் உள்ளது. 

மணிப்பூர் வன்முறை (கோப்புப்படம்)

அரசாங்கம் எதையாவது செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்ப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் இரண்டும் உள்ளன.  மணிப்பூர் மக்கள் தங்கள் கவலைகளை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும், எந்த பிரச்சினையும் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மணிப்பூரில் குகி ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களுக்கு தனி நிர்வாகம் வேண்டும் என்று மாநிலத்தின் 10 பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் விடுத்த கோரிக்கையை முதல்வர் பைரன் சிங் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படை வீரர்கள்

மணிப்பூரில் மைதேயி என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் சமூகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தினர் இந்த  பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர் தரப்பினர் பேரணி நடத்தினர். இதனை தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.  மாநிலம் முழுவதும் கைப்பேசி இணைய சேவை முடக்கப்பட்டது. பலத்த பாதுகாபபு இடையே மாநிலத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.