திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சாகா இன்று பதவியேற்பு..

திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக மாணிக் சாகா இன்று 2வது முறையாக பதவியேற்கிறார்.
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபேரவைக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், பாஜக கூட்டணி அபார வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதாவது பாஜக 32 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சி 1 தொகுதியிகும் வெற்றி பெற்றது. இதனையடுத்து திரிபுரா மாநிலத்தில் தற்போது முதலமைச்சராக இருக்கும் மாணிக் சகா மீண்டும் 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் மற்றொரு தரப்பில், பாஜக மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல்வரான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. இதனால், திரிபுராவில் தேர்தல் முடிந்தும் யார் முதல்வர் என்பதில் இழுபறி நீடித்தது.
திரிபுராவுக்கு பின்னர் தேர்தல் நடைபெற்ற நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் நேற்று முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் திரிபுரா விரைந்து, அங்கு திரிபுரா பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சகா மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 2வது முறையாக மாணிக் சகா இன்று பதவியேற்கிறார். அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பாஜக முதல்வர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர்.