முதியோர் இல்லத்தில் மரணமடைந்த தந்தை- வீடியோ காலில் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மகள்கள்

 
sw

ஹரியானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தொழிலதிபரின் இறுதிச்சடங்கில் அவரது 3 மகள்களும் வீடியோ கால் மூலம் கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 74 வயதான தொழிலதிபர் சிவச்சரன் குப்தா, தன் வாழ்நாள் முழுவதும் தன் மூன்று மகள்களை படிக்க வைத்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தார். ஆனால் இறுதிக்காலத்தில் அவரை பார்த்துக்கொள்ள யாரும் முன் வராததால், ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து மூன்று மகளுக்கும் முதியோர் இல்லம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது இறுதிச்சடங்கில் மூன்று மகளும் கலந்துகொள்ள வில்லை. மாறாக மூவரும் நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பையிலிருந்து வீடியோ கால் மூலம் தங்கள் தந்தையின் தகனத்தை பார்த்தனர். 


இதுகுறித்து முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த்குமார் கூறுகையில், “குப்தா தொலைபேசி மூலம் தனது மகள்களுடன் அடிக்கடி பேசி வந்தார். இருப்பினும், அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு, அவர்களது தொலைபேசி அழைப்புகள் குறைந்துவிட்டன. தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து, அவர் இறப்பதற்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவரைப் பார்க்க வரவில்லை. குப்தா இறந்த பிறகு மூன்று மகள்களுக்கும் தெரியப்படுத்தினோம். ஆனால் அவர்கள் தங்களுக்கு நேரமில்லை எனக் கூறி தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாது எனக் கூறிவிட்டனர். பின்னர் மகள்கள் வீடியோ கால் மூலம், தங்கள் தந்தையின் இறுதிச் சடங்குகளை பார்த்தனர். நேபாளத்தில் வசித்து ஆசிரியையாகப் பணிபுரியும் குப்தாவின் மகள் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று கோரி, ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பினார். ஆரம்பத்தில் குப்தாவின் அஸ்தியை வைக்குமாறு குடும்பத்தினர் கேட்டிருந்தனர். பின்னர், சோனிபட்டுக்கு வர தங்களுக்கு நேரமில்லை என்பதால், அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்” என்றார்.