ரூ.2,000 நோட்டு வாபஸ் என்பது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல் - மம்தா பானர்ஜி ஆவேசம்

 
Mamata

ரூ.2,000 நோட்டு வாபஸ் என்பது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை மேற்கு வங்க முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ் என்பது ஒரு சலுகை அல்ல. அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பின் போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை. அந்த கஷ்டத்திற்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.