கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் - மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆலோசனை

 
Kharge

கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர். இதேபோல் 8 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். யூ.டி.காதர் சட்டப்பேரவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் தகுதியான எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை சித்தராமையாவும், சிவகுமாரும் காங்கிரஸ் மேலிடத்துக்கு அளிக்கவுள்ளனர். அமைச்சர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.