கர்நாடக அமைச்சரவையில் மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு இடம்?

 
mallikarjun kharge

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கேவுக்கு கர்நாடக அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அடுத்த அரசு ஆட்சி அமைக்கும் வரை முதலமைச்சர் பதவியில் நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டார்.  இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் வி.சி.வேனுகோபால் அறிவித்தார். இதேபோல் அம்மாநில காங்கிரஸ் துணை தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நாளை மதியம் 12.30 மணி அளவில் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்தராமையாவுக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதுபோல் டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கேவுக்கு கர்நாடக அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண சவதி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறுபான்மை சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தும் விதமாக இஸ்லாமியார்களை அமைச்சர்களாக்க திட்டமிட்டிருப்பதாகவும், தமிழக காங்.பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எச்.முனியப்பா உள்ளிட்டோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.