ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை... மல்லிகார்ஜூன் கார்கே உறுதி

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உறுதியாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறும் நபர்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.  மோடி ஜி ஐந்தாறு நாடுகளுக்கு சென்று, இந்தியாவில் பிறப்பது பாவம் என்று கூறி நம் நாட்டு மக்களை அவமானப்படுத்தியது பற்றி என்ன சொல்கிறீர்கள்? 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

இங்கு ஜனநாயகம் குறைந்து வருகிறது, கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் வலுவிழக்கப்படுகிறது, தொலைக்காட்சி சேனல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, உண்மையை பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், இது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும் செயல் அல்ல என்றால் அது வேறு என்ன?. எனவே ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது இங்கிலாந்தில் பயணத்தின்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுகையில்,  இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை தடுக்க மைக்குகள் அணைக்கப்படுகின்றன, நாட்டில் எதிர்க்கட்சி என்ற கருத்தை அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.