ரூபாய் நோட்டு தடை நாட்டுக்கு நன்மை தருமா அல்லது இழப்பை ஏற்படுத்துமா என்பது பிரதமர் மோடிக்கு தெரியாது.. கார்கே

 
மல்லிகார்ஜுன கார்கே

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை நாட்டுக்கு நன்மை தருமா அல்லது இழப்பை ஏற்படுத்துமா என்று பிரதமர் மோடிக்கு தெரியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

2016ல் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000  நோட்டுகள் செல்லாது (பணமதிப்பிழப்பு நடவடிக்கை) என்று அறிவித்தையடுத்து, ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொருளாதாரத்தின் அவசர நாணய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவை அறிமுகப்படுத்தப்பட்டன, அதன் நோக்கம் காலப்போக்கில் நிறைவேற்றப்பட்டது, மற்ற மதிப்பு ரூபாய் நோட்டுகள் உடனடியாக கிடைத்ததால், ரிசர்வ் வங்கி 2028-19ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தியது.

ரூ.2,000 நோட்டுகள்

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும், இம்மாதம் 23ம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து சில்லரை மாற்றி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்நிலையில், ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை நாட்டுக்கு நன்மை தருமா அல்லது இழப்பை ஏற்படுத்துமா என்று பிரதமர் மோடிக்கு தெரியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

மோடி

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது: மோடி மற்றொரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரதமர் மோடி ஜப்பான் செல்லும் போதெல்லாம் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியிட்டு செல்வார். கடந்த முறை ஜப்பான் சென்ற போது ரூ.1,000 நோட்டு தடை செய்திருந்தார். இந்த முறை அவர் சென்ற போது ரூ.2,000 நோட்டுகளை தடை செய்துள்ளார். இந்த நடவடிக்கை நாட்டுக்கு நன்மை தருமா அல்லது இழப்பை ஏற்படுத்துமா என்று அவருக்கு (பிரதமர் மோடிக்கு) தெரியாது. மோடி செய்து வரும் ரூபாய் நோட்டு தடை  நடவடிக்கை இந்த முறையும் மக்களை தொந்தரவு செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.