பாஜக அதன் வேலையை காட்டும்....கைதுக்கு தயாராக இருங்கள்! - மல்லிகார்ஜுன கார்கே

 
Mallikarjuna Kharge

இந்தியா கூட்டணிக்கு எதிராக பாஜக விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும் எனவும் கைதுக்கு தயாராக இருங்கள் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று மற்றும் இன்று நடைபெற்றது.  இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கூட்டம் நடைபெற்றது. 

INDIA

இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணிக்கு எதிராக பாஜக விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும். வரும் மாதங்களில் மேலும் பல சோதனைகள், கைதுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். பாட்னா, பெங்களூரு கூட்டங்களின் வெற்றி, பிரதமர் மோடியின் உரைகளிலேயே தெரிகிறது. இந்தியா ஒரு போருக்கு தயாராகிறது. அந்த போரில் நாங்கல் இந்தியாவிற்காக நிற்கிறோம். தேர்தல் வரும்போதெல்லாம் விலை குறைப்பு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி என கூறினார்.