தடுப்பூசி போடாதவங்களுக்கு ரேஷன் கிடையாது.. எப்.ஐ.ஆர். பதிவு.. மத்திய பிரதேச அரசு அதிரடி

 
ரேஷன் கடை

மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கிடையாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸை கட்டுக்குள் வைப்பதற்கு முக்கிய ஆயுதமாக கோவிட் தடுப்பூசி கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய  அரசு நோக்கம் கொண்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்காக, தடுப்பூசி போட தயங்கும் மக்களை கட்டாயம் தடுப்பூசி போட வைக்க  மத்திய பிரதேச அரசு சில கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு, கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கிடையாது என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச அரவு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் 2 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். வாடிக்கையாளர் இந்த நெறிமுறையை பின்பற்றினாரா என்பதை சரிபார்ப்பது விற்பனையாளரின் பொறுப்பு. வாடிக்கையாளர் முதல் அல்லது 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்பதை விற்பனையாளர் கண்டுபிடித்தால், பொருட்கள் வாங்க வந்தவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்த வேண்டும். 

எப்.ஐ.ஆர்.

இந்த நெறிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். மேலும் அத்தகைய விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறியவர்களுக்கு ரேஷன் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது விற்பனையாளரின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய பிரதேசம் சிங்ராலி மாவட்டத்தில், டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத எந்தவொரு நபருக்கும் எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.