"சுதீஷ் ஜீ துண்டை கழட்டுங்க... ஒரே ஒரு முறை விஜயகாந்த் போட்டோவ காட்டிக்கவா"- ராஜ்யசபாவில் சம்பவம் செய்த எல்.கே.சுதீஷ்
மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்ற எல்.கே. சுதீஷ், இது தனது அரசியல் பயணத்தில் முக்கியமான மற்றும் பொறுப்பான தருணம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான திருச்சி சிவா, கிறிஸ்டோபர் திலக் , தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் சுதீஷ் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக மாநிலங்களவையில் பதவியேற்க வரும் போது கட்சி துண்டுடன் வந்த எல்.கே.சுதீஷிடம், சி.பி.ராதாகிருஷ்ணன் துண்டை கழற்றிவைத்துவிட்டு வருமாறு கூறினார். உடனே கழுத்தில் அணிந்திருந்த துண்டை கழட்டினார் சுதீஷ்...இறுதியில், அவையில் விஜயகாந்த் போட்டோவை காட்ட அனுமதி பெற்ற எல்.கே.சுதீஷ், தனது சட்டைப்பையில் இருந்த விஜயகாந்த் போட்டோவை எடுத்து காட்டினார்.

இந்நிலையில் எம்பி எல்.கே.சுதீஷ் தனது எக்ஸ் தளத்தில், “இன்று, மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற இந்த தருணம், என் வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் பொறுப்பான நாளாகும். இந்த உயர்ந்த பொறுப்பை எனக்கு அளித்த கழக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய மரியாதைக்குரிய அண்ணன் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கேப்டன் அவர்களின் ஆசீர்வாதமும்,அவரது அரசியல் பாடங்களும், என்னை நம்பிய மக்கள் அனைவரின் நம்பிக்கையும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாகும்.
மாநிலங்களவை உறுப்பினராக முதன்முறையாக பதவியேற்றார் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ்.
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) April 6, 2026
பதவியேற்க வரும்போது கழுத்தில் #DMDK துண்டை அணிந்திருந்த நிலையில் அதனை கழட்டுமாறு மாறு மாநிலங்களவை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியதை தொடர்ந்து கழுத்தில் அணிந்திருந்த துண்டை கழட்டினார் சுதீஷ்... pic.twitter.com/fjHbRYpyoO
என் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும்கூட மக்களின் நலனுக்காக மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டின் குரலை வலியுறுத்தவும், நேர்மையும் போராட்டமும் இணைந்து வெற்றி பெறும் என்பதை நிரூபிக்கவும் நான் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். கேப்டன் அவர்கள் கொண்ட கொள்கையான ‘இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே’ என்பதைக் தாரக மந்திரமாகக் கொண்டு என் அரசியல் பயணத்தை தொடர்வேன்” எனக் குறொப்பிட்டுள்ளார்.

