ஊழலை சகித்துக்கொள்ளாததுதான் மோடி அரசின் தாரக மந்திரம்.. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

 
கிரண் ரிஜிஜூ

ஊழலை சகித்துக்கொள்ளாததுதான் மோடி அரசின் தாரக மந்திரம் என்று மத்திய சட்ட துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற லோக்மத் தேசிய மாநாட்டில் மத்திய சட்ட துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் கிரண் ரிஜிஜூ பேசுகையில், எதிர்க்கட்சிகளை குறிவைக்க மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசாங்கம் பயன்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு சரியல்ல. பா.ஜ.க.வில் ஊழலை சகித்துக் கொள்ள முடியாது, எனவே பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊழலை சகித்துக்கொள்ளாததுதான் மோடி அரசின் தாரக மந்திரம் என்று தெரிவித்தார்.

பா.ஜ.க.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க பிரதமர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் (மக்களவை) ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது குறித்து கேள்விக்கு கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், ஒரு அமைச்சர் என்ற முறையில் நீதித்துறை அறிவிப்புகள் மீது நான் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கூறினார்.

உச்ச நீதி மன்றம்

மேலும், நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும், நீதித்துறையை பலவீனப்படுத்தவும் நாட்டில் ஒரு வடிவமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயக அமைப்பு மற்றும் இந்திய நீதித்துறையின் நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். நீதித்துறை விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுகிறது அல்லது இந்திய நீதித்துறையை அரசாங்கம் கட்டுப்படுத்த முயல்கிறது என்று இவர்கள் சில முன்கூட்டிய குற்றச்சாட்டை  உருவாக்குகிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நீதித்துறையை சீரழிக்க முயற்சிக்கின்றனர். நீதித்துறை முற்றிலும் சுதந்திரமானது என்று கிரண் ரிஜிஜூ வலியுறுத்தினார்.