நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் - குமாரசாமி பரபரப்பு பேச்சு

 
Kumarasamy

வருகிற நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். 

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அடுத்த அரசு ஆட்சி அமைக்கும் வரை முதலமைச்சர் பதவியில் நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டார்.  இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் வி.சி.வேனுகோபால் அறிவித்துள்ளார். இதேபோல் அம்மாநில காங்கிரஸ் துணை தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததாக நினைக்க வேண்டாம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எந்த கவலையும் வேண்டாம். பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது. அதில் புதியதாக எதுவும் நடக்கப்போவதில்லை. யாரை எங்கே எப்படி தடுப்பது என்பது எனக்கு தெரியும். நான் போராட தயாராக இருக்கிறேன். நான் யாரிடமும் உதவி கேட்க மாட்டேன். கர்நாடகத்தில் நவம்பர் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் நிகழும். பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு கூறினார்.