தண்ணீர் மட்டுமே குடித்து டயட்- இளம்பெண் மரணம்

கேரளாவில் யூடியூப் பார்த்து தண்ணீர் மட்டுமே குடிக்கும் டயட்டை பின்பற்றிய 18 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஸ்ரீநந்தா. இவர் அனோரெக்ஸியா நெர்வோசாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். சுமார் ஆறு மாதம் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்கும் டயட்டை பின்பற்றிய இவருக்கு Anorexia என்ற வகையான குறைபாடு ஏற்பட்டு பசியே தெரியாமல் போய்விடுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கண்ணூரில் உள்ள கூத்துபரம்பாவைச் சேர்ந்த ஸ்ரீநந்தா, பல நாட்களாக தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தார். பின்னர் அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். ஸ்ரீநந்தாவின் சோடியம் மற்றும் சர்க்கரை அளவுகள் சரிசெய்ய முடியாத அளவுக்குக் குறைந்துவிட்டன, இதனால் அவர் இறந்தார் என்று மருத்துவர் கூறுகின்றனர். ஸ்ரீநந்தா உணவு உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவரது செரிமான அமைப்பில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எடை அதிகமாக இருந்ததால் ஸ்ரீநந்தா, யூடியூப்பில் இருந்து சீரற்ற உணவுமுறை வீடியோக்களைப் பின்தொடர்ந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.