ரூ.2000 கோடி நிவாரணம் கேட்கும் கேரள அரசு.. என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி?? வயநாடு ஆய்வு நிறைவு..
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து முகாம்களில் தங்கியுள்ளமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி, இன்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணியளவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோருடன் வயநாடு புறப்பட்டார். வான்வழியாகவே பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். அப்போது பாதிப்பு விவரங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்கப்பட்டன.
பின்னர் தரை வழியாக பாதிகப்பட்ட இடங்களில் பார்வையிட்ட அவர், சில இடங்களு நடந்து சென்றும் பாதிப்புகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததை அடுத்து, பிரதமர் மோடி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டள்ள நிவாரண முகாம்களுக்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், கண்கலங்கி குறைகளை சொன்னவர்களுக்கு தோல்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனை அடுத்து வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார். அந்தக்கூட்டத்தில், “வயநாடு பேரிடர் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவை சிதைத்துவிட்டது. நிலச்சரிவு ஏற்பட்டது முதல், ஒவ்வொரு பணிகளையும் கண்காணித்து வந்தேன். நிலச்சரிவு பாதிப்புகளை தொடர்ந்து கேரள அரசு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. இந்த பேரிடர் சாதாரணமானது அல்ல. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தேன். பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்திற்கு நாம்தான் பொறுப்பு. கேரளாவிற்கு உதவிகள் விரைவில் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
பிரதமரின் வருகையை ஒட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் பாதித்த பகுதியில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு ரூ.2,000 கோடி நிதியுதவி கோரியிருக்கிறது. பிரதமரின் இந்த ஆய்வுக்குப் பிறகே வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா?, நிவாரண நிதி ஒதுக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்..
Our prayers are with those affected by the landslide in Wayanad. The Centre assures every possible support to aid in relief efforts.https://t.co/3fS83dFmrp
— Narendra Modi (@narendramodi) August 10, 2024
Our prayers are with those affected by the landslide in Wayanad. The Centre assures every possible support to aid in relief efforts.https://t.co/3fS83dFmrp
— Narendra Modi (@narendramodi) August 10, 2024