கொச்சி பிரம்மபுரம் கழிவு ஆலை தீ விபத்து... 13 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

 
தந்தை பெரியார் பிறந்தநாள்; தமிழில் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவு!

கேரள மாநிலம் கொச்சியின் பிரம்மபுரம் கழிவு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, 13 நாட்களுக்கு பிறகு அந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

கேரள மாநிலம் கொச்சியின் பிரம்மபுரம் கழிவு ஆலையில் கடந்த 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. குப்பை மேட்டில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து கொச்சியில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்த வேண்டும் என்று  முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சதீஷன் வலியுறுத்தினார். பிரம்மபுரம் கழிவு ஆலை தீ விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வந்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் முதல்வரையும், மாநில அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தன.

சதீஷன்

இந்நிலையில் பிரம்மபுரம் கழிவு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு 13 தினங்கள் கழித்து, முதல்வர் பினராயி விஜயன் தனது மவுனத்தை கலைத்தார். கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:  பிரம்மபுரம் தீ விபத்து காரணமாக 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் கடுமையான உடல்நலக் கோளாறுகள் இல்லை. பிரம்மபுரம் தீ விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கை காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும். ஆலை தொடங்கியதில் இருந்தே அதன் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் விஜிலென்ஸ் விசாரணை நடத்தப்படும். கடந்த 13ம் தேதிக்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. 

பிரம்மபுரம் கழிவு ஆலை

சிறு தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரம்மாபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணங்கள், கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உள்பட அனைத்து தொடர்புடைய விஷயங்களிலும் பரிந்துரைகளை சமர்பிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்படும். பிரம்மபுரத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக குப்பைகளை தரம் பிரிக்காமல் கொண்டு வந்து குவிக்கும் அறிவியலற்ற செயல் நடைமுறையில் உள்ளது.  கொச்சியின் செயல்பாடுகள் உள்ளூர் சுயராஜ்யத் துறையின் கூடுதல் தலைமை செயலாளரால் தினமும் மதிப்பீடு செய்யப்படும். இதுதவிர உள்ளாட்சி மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் ஒவ்வொரு வாரமும் ஆய்வு நடத்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.