மணிப்பூர் வன்முறைக்கான காரணத்தை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைத்த காங்கிரஸ்

 
மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் வன்முறைக்கான காரணத்தை கண்டறிய காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. 

மணிப்பூரில் மைதேயி என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் சமூகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தினர் இந்த  பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர் தரப்பினர் பேரணி நடத்தினர். இதனை தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.  மாநிலம் முழுவதும் கைப்பேசி இணைய சேவை முடக்கப்பட்டது. பலத்த பாதுகாபபு இடையே மாநிலத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

கே.சி.வேணுகோபால்

மணிப்பூர் வன்முறைக்கான காரணத்தை கண்டறிய காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூருக்கு சென்று, மாநிலத்தில் நடந்த பரவலான வன்முறைக்கான காரணங்களை கண்டறியவும், மணிப்பூரின் ஏ.ஐ.சி.சி. பொறுப்பாளர், பி.சி.சி. தலைவர் மற்றும் சி.எல்.பி. தலைவர் ஆகியோரின ஒருங்கிணைப்புடன் மதிப்பீடு செய்யவும் பின்வரும் உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார்.

உச்ச நீதி மன்றம்

இந்த உண்மை கண்டறியும் குழுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் எம்.பி. அஜோய் குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதீப் ராய் பர்மன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த குழு விரைவில் அறிக்கையை காங்கிரஸ் தலைவரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், மாநிலத்தின் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய,மாநில அரசுகள் நேற்று தெரிவித்தன.