உள்ளூர் தலைவர்கள் வாக்குறுதி அளித்தால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கார்கேவை அழைத்து வந்தனர்.. காங்கிரஸை கேலி செய்த கவிதா

 
கவிதா

உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் வாக்குறுதி அளித்தால் மக்கள் நம்பமாட்டார்கள் என நினைத்து, மல்லிகார்ஜூன் கார்கேவை கூட்டத்திற்கு அழைத்து வந்தனர் என்று காங்கிரஸ் கட்சியை  தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கவிதா கிண்டல் செய்தார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இரண்டு பெரிய கட்சிகளின் இரண்டு பொதுக் கூட்டங்களை மாநிலம் கண்டது. ஒன்று, காங்கிரஸ் கட்சி தலித்துகள் மீது புதிய அன்பை காட்டி எஸ்.சி./எஸ்.டி. அறிவிப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. பா.ஜ.க. தனது தேசிய தலைவர்களுடன் ரிது பரோசா கூட்டத்தை ஏற்பாடு செய்தது. தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதையே இது காட்டுகிறது. காங்கிரஸ் நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்தாலும் தலித்துகளின் வறுமையை போக்க பாடுபடவில்லை. தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். தலித்துகள், ஏழைகள், பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்காக பல திட்டங்களை முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கொண்டு வந்துள்ளார். 

காங்கிரஸ்

உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் வாக்குறுதி அளித்தால் மக்கள் நம்பமாட்டார்கள் என நினைத்து, மல்லிகார்ஜூன் கார்கேவை கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். நாங்கள் ஏற்கனவே  செய்து வருவதை இப்போதுதான் அவர்கள் அறிவித்துள்ளனர். தலித் பண்டுக்கு நாங்கள் ஏற்கனவே ரூ.10 லட்சம் ரூபாய் வழங்குகிறோம் என்பதால் அவர்கள் ரூ.12 லட்சம் வழங்குவதாக அறிவிக்கின்றனர். நாங்கள் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் கொடுப்பதால் அவர்கள் தற்போது ரூ.4 ஆயிரம் தருவதாக அறிவிக்கிறார்கள். காங்கிரஸூக்கு தலித்துகள் மீதும், ஏழைகள் மீதும் அன்பு இல்லை. தலித்துகளின் நலனில் கவனம் செலுத்தும் ஒரே மாநிலம் தெலங்கானா. 2014ல் மாநிலம் உருவானதில் இருந்து தனிநபர் வருமானத்தை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

 இந்த போக்கு ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழித்துவிடும் - மல்லிகார்ஜுன கார்கே..

காங்கிரஸ் செய்த ஒரே விஷயம் மல்லிகார்ஜூன் கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்கியதுதான். தலித்துகளுக்கு வேறுஎதும் செய்யவில்லை. 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்து 850 விவசாயிகள் உயிரிழக்க பா.ஜ.க. தான் காரணம். நமது விவசாயப் பண்டு திட்டததை நகலெடுத்து மத்தியிலும் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். வேட்பாளர்களை அறிவிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு முதல்வர் வேட்பாளர் இல்லை. எங்கள் முதல்வர் வேட்பாளர் கே. சந்திரசேகர் ராவ். அவர்கள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அவர்கள் குழப்பத்திலும் விரக்தியிலும் உள்ளனர். இதனால் இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்து பொய் சொல்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.