30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு திருமணம் - கர்நாடகாவில் நடந்த விநோத சடங்கு..

 
ஆன்மாக்களுக்கு திருமணம்

30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த இருவருக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத சடங்கு முறை கர்நாடக மாநிலத்தில்  நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷனா கன்னட மாவட்டத்தில் ‘பிரேதா கல்யாணம்’ என்கிற பெயரில் நடைபெற்ற இந்த திருமண சடங்கில் 30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த இரண்டு பேருக்கு   மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வினை பிரபல யு டியூபரான அண்ணி அருள் என்பவர் தனது twitter பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மணமக்களாக கருதப்படும் ஆணும்,  பெண்ணும் குழந்தைகளாக மகப்பேறின் போதே  உயிரிழந்து விட்டனர்.   30 ஆண்டுகளுக்கு பின்னர் இறந்தவர்களின் நினைவாக இந்த சடங்கு நடத்தப்பட்டது. திருமணத்திற்கான சரியான  வயது 30 என்பதால், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையச் செய்யும் விதமாக  இறந்தவர்களின் குடும்பத்தார் சேர்ந்து இந்த  திருமண விழாவை செய்து வைக்கின்றனர்.

மணமக்கள் இருவருக்கும் புதிய ஆடைகளை வாங்கி வைத்து, அருகருகே இரண்டு இருக்கைகளை அமைத்து அவற்றின் மீது திருமண ஆடைகளை வைத்து விடுகின்றனர்.   அந்த இருக்கைகளில் மணமக்கள் இருப்பதாக கருதி,  இரு குடும்பத்தினரும் சேர்ந்து சடங்குகளை மேற்கொள்கின்றனர்.  விளக்கு ஏந்தியவாறு சுற்றி வருவது,  சப்தபதி போன்று அனைத்து திருமண சடங்குகளும் முறைப்படி உறவினர்களால் செய்து வைக்கப்படுகிறது. பின்னர் தான்  மணமக்களின் பெயர் என்ன என கேட்கப்பட்டு மணமகனுக்கு சந்தப்பா எனவும்,  மணப்பெண்ணுக்கு சோபா எனவும் பெயர் சூட்டப்படுகிறது.  மணமக்களுக்கு அர்ச்சனை தூவி ஆசீர்வாதம் செய்து தொடர்ந்து , ஆரத்தி எடுத்து  வீட்டிற்கும்  வரவேற்கின்றனர்.

இந்த திருமணத்திற்கான அனைத்து சடங்குகளையும் இரு வீ9ட்டாரும்  முறைப்படி செய்து வைக்கின்றனர்.  கல்யாண சாப்பாடாக  சிக்கன், மட்டன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படுகிறது. இந்த விநோத திருமண சடங்கில் திருமணமானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமாம்.. சிறுவர்கள், திருமணமாகாதவர்கள் இந்தி பங்கேற்க அனுமதி இல்லையாம்.  பிறக்கும் போது உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து இவ்வாறு திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாள்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.  இந்த முறை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது.