கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - சித்தராமையா நம்பிக்கை!

 
siddaramaiah

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 36 அறைகளில் 4256 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் 115-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான பாஜக 70க்கும் மேற்பட்ட இடங்களிலும் மதசார்பற்ற , ஜனதா தளம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் வெற்றி பெறும் எனவும் சித்தராமையா கூறியுள்ளார். தேர்தல் முடிவுகளின் படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சித்தராமையா மீண்டும் முதலமைச்சராவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.